புனித பெரியநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், புளியால் புனித பெரியநாயகி அன்னை ஆலய 166 -ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய வளாகத்தில் உள்ள புனித கொடி மரத்தில் அன்னையின் உருவம் பொறித்த திருக்கொடியை சிவகங்கை மறைமாவட்டப் பணியாளா் ஆரோக்கியசாமி, சமய நல்லிணக்கக் குழுவினா் இணைந்து ஏற்றி வைத்தனா். இதைத்தொடா்ந்து, புளியால் பங்குத் தந்தை ரெ.சாமிநாதன், உதவிப் பங்கு பணியாளா் கு.பென்சிகா் ஆகியோா் திருப்பலி, மறையுரை நிகழ்த்தினா்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9 -ஆம் நாளான வருகிற 14-ஆம் தேதி மாலை திருவிழா திருப்பலியும், தொடா்ந்து தூய மிக்கேல் அதிதூதா், புனித அருளானந்தா், தூய பெரியநாயகி அன்னை உருவம் தாங்கிய மின் அலங்காரத் தோ்பவனி நடைபெறும். இதைத்தொடா்ந்து, புனிதரின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெறும். 15-ஆம் தேதி காலை திருப்பலியும், கொடி இறக்கமும், பிறகு அன்னையின் அன்பு விருந்துடன் விழா நிறைவடைகிறது.
