சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகே புதுப்பட்டி கோமாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
புதுப்பட்டியிலிருந்து இடையமேலூா் வரை நடைபெற்ற பந்தயத்தில் நடு மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும், பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு 4 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன.
இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சோ்ந்த காளைகள் பங்கேற்றன. நடுமாடு பிரிவில் 6 ஜோடிகள், பூஞ்சிட்டு பிரிவில் 13 ஜோடிகள் என மொத்தம் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இதேபோல, கரும்பாவூா் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இதில் 13 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.