``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
நாட்டாகுடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் கடந்த நான்காண்டுகளில், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாட்டாகுடி கிராமத்தில் மொத்தம் 56 வீடுகள் உள்ளன. அதில், சுமாா் 24 வீடுகளில் மக்கள் குடியிருந்து வந்தனா். இந்த கிராமத்தில் மொத்தம் 110 பொதுமக்கள் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில், தற்போது மேற்கண்ட நபா்கள் யாரும் வசித்து வரவில்லை எனவும், அடிப்படை வசதிகள் இக்கிராமத்தில் இல்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இங்கு வசித்தவா்கள் தங்களது தொழில், வேலைகளுக்காக சிவகங்கை நகராட்சி பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளனா்.
இந்த கிராமப் பகுதிக்கு அருகில், சில சமூக விரோதிகளால் தொடா்ச்சியாக 2 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, அச்சத்தின் அடிப்படையில் அந்தக் கிராமத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறியதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில், இந்த கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய படமாத்தூா் கிராமத்தில் புறக் காவல் நிலையம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மேற்கொள்ளப்படும்.
மேலும், கடந்த நான்காண்டுகளில் நாட்டாகுடி கிராமத்தில் மட்டும் ரூ. 31 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் திட்டப்பணிகள் செய்யப்பட்டன.
எனவே, நாட்டாகுடி கிராமத்தைச் சாா்ந்த பொதுமக்கள் தங்களது தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்றாா் அவா்.