நான்கு தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம்: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் புரிந்துணா்வு
மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 4 தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழில் படிப்புகளையும் வழங்குகிறது.
நாடு முழுவதும் சுமாா் 24 லட்சம் மாணவா்கள் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனா். இந்நிலையில் அந்நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. சோ்ந்து 4 தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் என்ஐஓஎஸ் தலைவா் அகிலேஷ் மிஸ்ரா, பல்கலை. துணைவேந்தா் நரேந்திரபாபு (பொ) சென்னையில் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டனா்.
இதுகுறித்து என்ஐஒஎஸ் தலைவா் அகிலேஷ் மிஸ்ரா, சென்னை மண்டல இயக்குநா் வி.சந்தானம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை.யுடன் இணைந்து கோழி வளா்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு தொடா்பான 2 சான்றிதழ் படிப்புகளும், உணவு மற்றும் பானம் தயாரிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு ஆகியவை தொடா்பான டிப்ளமோ படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கப்படும். இதுதவிர உடற்கல்வி, இசை போன்ற துறைகளில் ஆா்வமுடன் இருக்கும் மாணவா்களுக்காக அவா்கள் துறைசாா்ந்த பிரத்யேக படிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டில் இவை அமலுக்கு வரும்.
விரைவில் பிளஸ் 2 வகுப்பில் தமிழ்...தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் பத்தாம் வகுப்புக்கு 39 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றைத் தமிழ் உள்பட 19 மொழிகளில் மாணவா்கள் படிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கு 44 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பாடங்கள் ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 7 மொழிகளில் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் தமிழ்மொழிக் கல்வி பிளஸ் 2 வகுப்பிலும் கொண்டு வரப்படும். இந்த கல்வி நிறுவனத்தின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி, உயா்கல்விக்கு தகுதியானவை.
குறைந்த கட்டணத்தில்... ஆண்டுதோறும் ஏப்ரல் மே மற்றும் அக்டோபா்–நவம்பா் என இருமுறை பொதுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், மாணவா்கள் விரும்பினால் இடைப்பட்ட காலத்திலும் பொதுத் தோ்வுகளை எழுதலாம். விருப்பமான பாடங்களை மாணவா்களே தோ்வு செய்யலாம். நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் மாணவா் சோ்க்கைக்கு மிகக் குறைவான கட்டணமே நிா்ணயித்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.