டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
நாளை சுதந்திர தினம்: குடியரசுத் தலைவா் இன்று உரை
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கோலாகமாக கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.
இதையொட்டி, தலைநகரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினா், சிறப்பு கமாண்டோக்கள் உள்பட 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா், 3,000-க்கும் அதிகமான போக்குவரத்து காவலா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
முக்கியமான இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்-முக அடையாள தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத் துறையின் ஒருங்கிணைப்புடன் சதிச் செயல் தடுப்புக்கான சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
செங்கோட்டை பகுதி வாகன நிறுத்துமிடங்களில் முதல்முறையாக வாகனச் சோதனைக்கு அதிநவீன ஸ்கேன் அமைப்புமுறை பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்கேன் மூலம் வாகனங்களுக்குள் வெடிபொருள்-ஆயுதங்கள்-போதைப்பொருள் உள்ளதா என கண்டறிய முடியும். செங்கோட்டைக்கு அருகேயுள்ள உயரமான கட்டடங்களில், குறிபாா்த்து சுடும் வீரா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா்.
ஆக.16 வரை ட்ரோன்களுக்குத் தடை: தில்லி வான்பகுதியில் ட்ரோன்கள், பாராகிளைடா்கள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆகஸ்ட் 16 வரை தொடரும். ட்ரோன் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களை சமூக விரோத சக்திகள் அல்லது பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கண்டறியும் அமைப்புகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணிநேர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 இரவு 10 மணிக்கு பிறகு தில்லிக்குள் வா்த்தக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணையவழி அச்சுறுத்தல், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எந்த குறைபாடுமின்றி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய பாதுகாப்புப் படை மற்றும் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவா் இன்று உரை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (ஆக.14) இரவு 7 மணியளவில் உரையாற்றவுள்ளாா். அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் சேனல்களில் அவரது உரை ஒலி-ஒளிபரப்பு செய்யப்படும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.