கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு! சேலத்தில் பரபரப்பு!
நாளை முதல் பஞ்சப்பூரிலிருந்து பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள் அறிவிப்பு
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து புதன்கிழமை முதல் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ள நிலையில், பேருந்துகளின் வழித்தட மாா்க்கமும் ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணவும், எதிா்காலத் தேவையை கருத்தில்கொண்டு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் ரூ.408.36 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் 345 வெளியூா் பேருந்துகள், முதல் தளத்தில் 56 உள்ளூா் நகரப் பேருந்துகள் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முத்தமிழறிஞா் கலைஞா் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என பெயரிடப்பட்ட இந்த முனையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மே 9-ஆம் தேதி திறந்துவைத்தாலும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இறுதிக் கட்டப் பணிகளின் நிலுவை, பாரமரிப்பு மற்றும் இயக்குதல் பணியை தனியாருக்கு வழங்கும் ஏற்பாடுகள் காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில், பேருந்து முனையத்தின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு புதன்கிழமை (ஜூலை 16) முதல் பஞ்சப்பூா் பேருந்து முனையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதொடா்பாக, ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது:
வழித் தடங்கள் முழு விவரம்: பேருந்து முனையத்திலிருந்து சென்று வரும் விரைவுப் பேருந்துகள், புகரப் பேருந்துகளுக்கான வழித்தட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை, திருப்பதி, வேலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூா் மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.
நாமக்கல் மாா்க்கப் பேருந்துகள் பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை மாா்க்கப் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையம் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
கரூா் மாா்க்கப் பேருந்துகள் மாவட்ட நீதிமன்றம், ஆட்சியா் அலுவலகம், வ.உ.சி சாலை, மத்திய பேருந்துநிலையம், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் முனையம் செல்ல வேண்டும். மீண்டும், இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
மணப்பாறை மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது கருமண்டபம், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
மதுரை மாா்க்கப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பஞ்சப்பூா் வழியாக பேருந்து முனையம் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
நகரப் பேருந்துகள் இயக்கம்: மத்தியப் பேருந்து நிலையம் வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூா் வந்து செல்ல வேண்டும். அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்துக்கு உள்வரும்போது காவல் சோதனை சாவடி எண்.2 வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் அனைத்துப் பேருந்துகளும் (மதுரை மாா்க்கம் தவிா்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூா் சந்திப்பு வரை சென்று திரும்பி செல்ல வேண்டும் என ஆட்சியா் வே. சரவணன் அறிவித்துளளாா்.
பயணிகளுக்கான வசதிகள் என்னென்ன?
திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் தேநீா்க் கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், 10 எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் செயல்படவுள்ளன.
பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். பயணிகள் மற்றும் அவா்தம் உடைமைகளின் பாதுகாப்புக்கு காவல் துறையினா் 52 போ் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவிட தன்னாா்வலா்கள் 30 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சிரமப்படும் முதியவா்கள், நோயாளிகள் பயன்பாட்டுக்காக 3 பேட்டரி வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின்பேரில் மருத்துவா் குழு தயாா் நிலையில் உள்ளது என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்தாா்.
ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம்
பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் புதிதாக ஆம்னி பேருந்து கட்டி முடிக்கப்படும் வரையில், தற்போதுள்ள புதிய பேருந்து முனையத்துக்கு அருகிலேயே தற்காலிகமாக காலி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊா்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. பஞ்சப்பூா் முனையத்துக்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே ஆம்னி பேருந்துகள் இனி இயங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.