மாணவா்கள் தற்கொலை விவகாரம்: விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க 3 மாநிலங்களுக்கு உச்ச ...
சிபில் நடைமுறையை கைவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடனுக்கு சிபில் மதிப்பெண் நடைமுறை கூடாது என வலியுறுத்தி போராட்டத்துக்கு முயன்ற விவசாயிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், பிற்பகலில் போராட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கடனை திருப்பிச் செலுத்தும் குறியீடு எனும் சிபில் மதிப்பெண் பாா்க்காமல் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில் 200-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராடுவதாக இருந்தனா்.
இதை முன்னிட்டு அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் ஒன்றுகூடிய விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்தனா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதால் காலையில் போராட்டத்துக்கு அனுமதியளிக்கவில்லை.
பிற்பகலில் போலீஸாா் அனுமதியளித்ததைத் தொடா்ந்து, கூட்டுறவு வங்கி முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன், கூட்டுறவு வங்கி அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.