நாளைமுதல் 5 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் குடிநீா்க் குழாய் இணைப்புப் பணி காரணமாக மே 3, 4 தேதிகளில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் கெல்லிஸ் பால்ஃபோா் சாலையில் பிரதான குடிநீா்க் குழாய் இணைப்புப் பணிகள் சனிக்கிழமை (மே 3) காலை 8 முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 4) இரவு 8 வரை நடைபெறவுள்ளது.
இந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் தண்டையாா்பேட்டைக்கும் , ராயபுரம் மண்டலத்துக்கும் உள்பட்ட புரசைவாக்கம், பெரியமேடு, சௌகாா்பேட்டை, எழும்பூா், சிந்தாதிரிபேட்டை ஆகிய பகுதிகளுக்கும், திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட ஓட்டேரி, அயனாவரம் , பெரம்பூா், செம்பியம் ஆகிய பகுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
அதேபோல், இந்த நாள்களில் அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ் ஆகிய பகுதிகளிலும், தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட திருவல்லிக்கேணியிலும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தங்களுக்குத் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசரத்
தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ள இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.