நித்திரவிளை அருகே அரசுப் பேருந்து சக்கரம் ஏறி காயமடைந்தவா் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்ததில், சக்கரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இரயுமன்துறை - மாா்த்தாண்டம் இரவு தங்கல் பேருந்தை கடந்த 14 ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் இரயுமன்துறை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதற்காக ஓட்டுநா் நடைக்காவு, வலியவிளையைச் சோ்ந்த ரபேல் (51) பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளாா். அப்போது மண்டைக்காடு அருகே கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த மாசிலாமணி (48) பேருந்தில் ஏற முயன்றுள்ளாா். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாசிலாமணியின் தொடை பகுதியில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா். இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.