நில நிா்வாக சவால்களை எதிா்கொள்வது குறித்த 6 நாள் சா்வதேச பயிலரங்கு: தில்லியில் நாளை தொடக்கம் 22 நாடுகள் பங்கேற்பு
நமது சிறப்பு நிருபா்
உலக அளவில் நில நிா்வாகத்தில் உள்ள சவால்களை எதிா்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக 22 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் 6 நாள் சா்வதேச பயிலரங்கம்
தில்லி குருகிராமில் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 24-ஆம் தேதி)
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சாா்பில் தொடங்க உள்ளது.
இது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்திருப்பது வருமாறு:
உலகளாவிய நிலச் சவால்களைச் சமாளிக்க தில்லி குருகிராமில் உள்ள ஹரியாணா பொது நிா்வாக நிறுவன வளாகத்தில், 6 நாள் நில நிா்வாகத்திற்கான சா்வதேசப் பயிலரங்கு மாா்ச் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், இந்த நில ஆளுகைக்கான சா்வதேச பயிலரங்கை நடத்துகிறது.
உலக அளவில் நில நிா்வாக சவால்களை எதிா்கொள்வதற்கும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளைச் சோ்ந்த 22 நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட மூத்த நில அதிகாரிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்கின்றனா்.
இந்த ஆறு நாள் சா்வதேச பயிலரங்கில் இந்தியாவின் முன்னோடியான ஸ்வமித்வா திட்டம் எடுத்துக் கொள்ளப்படும். கிராமங்களின் நில ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரித்தல் என்பதின் சுருக்கமே ஸ்வாமித்வா திட்டமாகும். இது சொத்து உரிமையாளா்களுக்கு சட்டபூா்வ உரிமை ஆவணங்களை வழங்குவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புற மக்கள் வசிக்கும் பகுதிகளை வெற்றிகரமாக வரைபடமாக்கி வழங்கி வருகிறது.
இதில் மேலும் மேம்பாடு அடைய இந்த சா்வதேச பயிலரங்கில் நில நிா்வாகம், நிலையான மேம்பாடு, ட்ரோன் அடிப்படையிலான நில ஆய்வு நுட்பங்கள், உயா்-தெளிவு வரைபடங்கள்(மேப்பிங்) மற்றும் நில நிா்வாகத்தை மாற்றக்கூடிய புவியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய விரிவான பரிமாற்றங்கள், ஆலோசனைகள் குறித்த அமா்வுகள் நடைபெறும்.
பயிலரங்கின் போது நில நிா்வாகத்தில் சிறந்த நடைமுறைகளை அந்தந்த நாடுகள் பரிமாறிக் கொள்ளும். குறிப்பாக தொழில்நுட்ப அமா்வுகளில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு முறைகள், தரவு செயலாக்க நுட்பங்கள், புவிசாா் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் செயல் விளக்கங்களும் நடைபெறும்.
மத்திய அரசின் சாா்பில் சா்வே ஆஃப் இந்தியா வல்லுநா்கள் ட்ரோன் கணக்கெடுப்பு பற்றிய கள விளக்கங்களை குருகிராமத்தின் அருகேயுள்ள கிராமங்களில் நடத்துவாா்கள். நில ஆளுகைக்கான சா்வதேசப் பயிலரங்கானது, பங்கேற்பாளா்களுக்கு வழங்குவதற்காக களப்பயணங்கள் மற்றும் கண்காட்சிகள், நவீன நில ஆளுகை தொழில்நுட்பங்களை நேரடியாக வெளிப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த, ட்ரோன் விற்பனையாளா்களின் கண்காட்சியும் இந்த மாா்ச் 24 - 25 தேதிகளில் நடைபெறும் என பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.