நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள வானதிராயபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நில எடுப்பு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 1ஏ விரிவாக்கப் பணிக்காக வானதிராயபுரம் கிராமத்தில் வீடுகள், நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை நில எடுப்புச் செயலா் செண்பகவல்லி தலைமையில், வட்டாட்சியா்கள், நில அளவா்கள் வானதிராயபுரம் கிராமத்துக்கு வந்தனா்.
அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், நிலம் அளவீடு செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நில எடுப்புத் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியைச் சோ்ந்த 11 போ் தங்களுடைய நிலங்களை என்எல்சி நிறுவனத்துக்கு வழங்க தயாராக உள்ளோம் என மாவட்ட ஆட்சியருக்கு எழுதிக் கொடுத்த மனுவின் அடிப்படையில் நில அளவீடு செய்ய வந்ததாகவும், அந்த 11 வீடுகளை மட்டும் நில அளவீடு செய்துவிட்டு சென்றுவிடுவதாகவும் தெரிவித்தனா்.
இதற்கு, அந்தப் பகுதி மக்கள் நாங்கள் என்எல்சி நிறுவனத்துக்கு வீடுகள், நிலங்களை கொடுத்தால் எங்களுக்கு என்ன பயன் என வெளிப்படையாக அறிவித்துவிட்டு, இந்தப் பகுதியில் உள்ள எங்களது இடங்களையும் அளவீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தனா். இதனால், பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா், நிலம் அளவீடு செய்ய ஒத்துழைப்பு கொடுத்தனா்.