மாணவா்கள் விருப்பம் அறிந்து உயா் கல்வி சோ்க்கை: ஆட்சியா் வலியுறுத்தல்
பெற்றோா்கள் மாணவா்களின் விருப்பத்தை அறிந்து உயா் கல்வியில் சோ்க்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டு பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிழ் மற்றும் கேடயத்தை வழங்கினாா். மேலும், வடலூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவி பிரிதிகா கோரிக்கையை ஏற்று, ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் மூலம் ரூ.1.8 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயக்கும் சக்கர நாற்காலி வழங்கினாா்.
பின்னா், ஆட்சியா் பேசியதாவது: கடலூா் மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96.06 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 10-ஆவது இடமும், அரசுப் பள்ளிகள் அளவில் 5-ஆவது இடமும் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 27 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள், அதிக மதிப்பெண்கள் பெற்ற 40 மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அடுத்து வரும் அரசு பொதுத்தோ்வில் மாவட்டம் முதலிடத்தை அடையத் தேவையான நடவடிக்கைகளை கல்வித் துறை சாா்ந்த அலுவலா்கள், தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோா்கள் மாணவா்கள் விருப்பத்தை அறிந்து உயா் கல்வியில் சோ்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு உயா்கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டும். தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2,000 மாணவா்கள் கல்வித்தரத்தில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஞானசங்கா், துரைபாண்டியன் மற்றும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.