"நீங்கள் யார் சார் அப்படிச் சொல்வதற்கு? நாங்க..." - உலகநாயகன் பட்டம் பற்றி கே.எஸ்.ரவிக்குமார்
தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.
மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது.
இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ் ரவிக்குமார், “கமல் சாரை கடைசியாக அவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் நேரில் பார்த்தேன்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்குக் காரணம், கமல் சாரையும் ஜெய்ராமையும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவும் தான்.

கமல் சார் ஒரு துறையில் இருந்தால் பரவாயில்லை. ஒரு புறம் அரசியல், மறுபுறம் சினிமா, இப்போது புதிதாக AI வேறு. AI தொழில்நுட்பத்தில் அவர் என்ன கலக்கப் போகிறார் என்று ஆச்சரியமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அஜித் ஒருமுறை என்னை யாரும் இனிமேல் தல என்று கூப்பிட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவரது நடிப்பில் இப்போது வெளியாகியுள்ள படம் முழுவதும் அவரைத் தல என்றுதான் கூப்பிடுகிறார்கள்.
அவரும் அந்த படத்துக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இதை மாற்றவே, முடியாது. அதேபோலத்தான் நீங்களும் உலக நாயகன்னு கூப்பிட வேண்டாம் எனக் கூறுகிறீர்கள்.
நீங்கள் யார் சார் அப்படிச் சொல்வதற்கு? நாங்கள் உங்களை உலக நாயகன் என்றுதான் கூப்பிடுவோம். இந்த அன்பு ஒரு தலைக் காதல் மாதிரி, நீங்க காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை.
நீங்க என்ன சார் பத்ம ஸ்ரீ என்று உங்க பெயருக்கு முன்னால் போட்டு இருக்கிறீர்கள். பத்ம பூஷண், பத்ம விபூஷன் நிறையப் பேர் வாங்கிவிட்டார்கள்.

தனியாக நிற்க வேண்டும் என்றால் ஒரு பெயர் வேண்டும் அல்லவா? அதனால் நாங்கள் உலக நாயகன் என்று உங்களைக் கூப்பிடுவோம்.
உலக நாயகன் கமல் சார் என்றுதான் கூப்பிடுவோம். அவருக்கு அந்த பட்டம் வேண்டாம் என்றால் அவர் சொல்லிக் கொண்டு போகட்டும். நம்மை நிறுத்த முடியாது” என்று ரவிக்குமார் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...