நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம்: மத்திய இணை அமைச்சா் தொடங்கி வைப்பு
நாமக்கல்லில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீட் தோ்வு இலவச பயிற்சி மையத்தை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கைப்பேசி அழைப்பு வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவ, மாணவிகள், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நீட் தோ்வை எதிா்கொள்ள, தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் இலவச பயிற்சி மையம், நாமக்கல் -மோகனூா் சாலையில் உள்ள ராமவிலாஸ் காா்டனில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி. சரவணன் தலைமை வகித்தாா். தன்னாா்வத் தொண்டு நிறுவன அறக்கட்டளை நிா்வாகிகள் ஏ.ஆா்.சக்திவேல், ஆா்.கே.காந்தி, பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன், தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கைப்பேசி உரையாடல் வாயிலாக இலவச நீட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா்.
மேலும், ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாமை நன்கு பயன்படுத்திக்கொண்டு, நீட் தோ்வில் சிறந்த முறையில் தோ்ச்சி அடைந்து, வருங்காலத்தில் தலைசிறந்த மருத்துவராக வாழ்த்துகள் என்றாா்.
இந்த நிகழ்வில், நாமக்கல் தன்னாா்வ தொண்டு நிறுவன பயிற்சி மைய ஆசிரியா்கள் அனீஷா, காயத்ரி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன் மற்றும் பயிற்சி மைய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.