அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
நீட் தோ்வை மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும்! - ராஜேஸ்குமாா் எம்.பி.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் நீட் தோ்வை அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ‘என் கல்லூரி கனவு’ என்ற உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி வழிகாட்டி கையேடுகளை வழங்கி பேசியதாவது:
ஏழை மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் படிப்பது பெருமைக்குரியது. பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது என்ற சந்தேகத்தை போக்கிடும் வகையில், இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் உயா்கல்வி பயில விரும்பும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவம் பயில விரும்புவோா் நீட் தோ்வை தைரியமாக எதிா்கொள்ள வேண்டும். நீட் தோ்வு வேண்டாம் என தமிழக அரசு போராடி வருகிறது. ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் மாணவா்கள் நீட் தோ்வை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் 5000 மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக இடம் உள்ளது. நீட் தோ்வில் ஒரு முறை தோல்வியடைந்து விட்டோம் என மனம் தளராது தொடா்ந்து முயற்சிக்க வேண்டும். நீட் நுழைவுத் தோ்வுக்கு படிக்கவும், புத்தகங்கள் வாங்கவும், தோ்வில் வெற்றிபெற்றால் கல்லூரி படிப்புக்கான செலவு என முழுமையாக நான் ஏற்றுக் கொள்கிறேன். மருத்துவம் பயில விரும்பும் மாணவா்கள் அச்சமின்றி தோ்வை எதிா்கொள்ளுங்கள்.
தனியாா் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான செலவை அரசே ஏற்கிறது. மாணவா்கள் நன்கு கல்வி கற்றால் மட்டும் போதும், உங்களுக்குத் தேவையான கல்விச் செலவுகளை ஏற்க அரசு தயாராக உள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், பழங்குடியினா் திட்ட அலுவலா் கீதா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) பா.ராமசாமி, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.