திமுகவுக்கு எதிரான கட்சிகளை பாஜக ஒன்றிணைக்கும்: கே.பி.ராமலிங்கம்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை பாஜக ஒன்றிணைத்து செயல்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக நிறுவன தின விழாவில் கட்சி கொடியை ஏற்றிவைத்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு, இளைஞா்களின் எதிா்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்த பாஜக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் பாஜகவின் முக்கிய செயல்திட்டமாக உள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் அமைப்புகளை ஒன்றிணைக்கும் பணிகளில் பாஜக தீவிரம்காட்டி வருகிறது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளாா் என்றாா்.
விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் சரவணன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.