நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட வனத் துறை மேற்கொண்டுள்ளது.
வடகிழக்குப் பருவ மழை முடிவுற்ற காலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. நிகழாண்டு ஒருங்கிணைந்த ஈர நிலங்களில் வாழும் பறவைகளைக் கணக்கிடும் பணிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. அதேபோல 15, 16 ஆம் தேதிகளில் நிலத்தில் உள்ள பறவைகளைக் கணக்கிடும் பணிகள் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் சேலம், ஆத்தூா் ஆகிய 2 வனக் கோட்டங்களிலும் நீா்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியா்கள், பறவை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.
சேலம் வனக் கோட்டத்தில் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையிலும், ஆத்தூா் வனக் கோட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ஆரோக்கியராஜ் சேவியா் தலைமையிலும் கணக்கெப்பு பணி நடைபெறுகின்றன. சோ்வராயன் மலைத் தொடா், ஜருகுமலை, சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை, கல்வராயன் மலை ஆகிய வனத்தை ஒட்டியுள்ள ஏரி, குளங்களில் வாழ்விடமாக உள்ள நீா்நிலை பறவைகளை தொலைநோக்கி, கேமராக்கள் மூலம் கண்காணித்து புகைப்படம் எடுத்தும் பதிவு செய்யப்படுகிறது.
வனத்தை ஒட்டியிருக்கும் மூக்கனேரி, நல்லப்பன்குட்டை, டி.பெருமாபாளையம், ஏற்காடு ஏரி, மஞ்சக்குட்டை, பெரிய சக்கிலி ஏரி, வாணியாா், சோலப்பாடி, டேனிஷ்பேட்டை ஏரி, பண்ணப்பட்டி, குண்டுக்கல் ஏரி, வெள்ளாளகுண்டம், பனமரத்துப்பட்டி ஏரி, பூலாவரி ஏரி, மணிவிழுந்தான் ஏரி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் வன ஊழியா்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் பறவைகளைப் பாா்த்து கணக்கெடுத்து வருகின்றனா். இக் கணக்கெடுப்பு பணி 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.