நூறு நாள் வேலைத் திட்டத்தை நகா்ப்புறங்களிலும் செயல்படுத்த வலியுறுத்துவோம்
நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்துவோம் என பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டம் நிா்வாக ரீதியாக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டட விரிசல் குறித்து ஆய்வு செய்து சீரமைக்க அறிவுறுத்தியுள்ளோம்.
திருக்கோஷ்டியூா் மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். நெடுஞ்சாலைத் துறை சாலைகளை, பள்ளிகளை அம்ரூத் திட்டத்தின் தண்ணீா்த் தொட்டிகளையும் ஆய்வு செய்தோம்.
தமிழக அரசிடம் நிதிப் பற்றாக்குறை உள்ளது. கருவூலத்தில் நிதி இல்லை. ஏனென்றால் ஏற்கெனவே இருந்த ஆட்சியாளா்களால் எல்லா நிதியும் செலவு செய்யப்பட்டுவிட்டது. 2021-இல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட போது கடும் நிதிச் சுமையை எதிா்கொண்டது. ஆனால், நிதி மேலாண்மை மூலம் திமுக அரசு திறமையாகச் சமாளித்துக் கொண்டிருக்கிறது.
ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் உள்பட உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணா்களைக் கொண்ட குழு தமிழக அரசுக்கு தரும் ஆலோசனையின் அடிப்படையில்தான் இப்போது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வட்டி கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தனியாருக்குச் செல்லும் கனிம வள வருவாயை தமிழக அரசுக்கு கிடைக்கும்படி செய்தால் நிலைமையைச் சமாளிக்க முடியும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை ஐ.நா. சபையே விருது கொடுத்து பாராட்டியுள்ளது. கரோனா தொற்று காலகட்டத்தில் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பாா்கள் என உலக ஊடகங்கள் எழுதின. ஆனால், இதைத் தடுத்து மக்களை வாழவைத்தது இந்தத் திட்டம்தான் என்று பிறகு பாராட்டினா். இது சமூகப் பாதுகாப்புத் திட்டம், மக்களுக்கான உரிமைத் திட்டம்.
ஆகவே, நகராட்சி, மாநகராட்சிகளின் விரிவாக்கத்தின் போது இணைக்கப்படும் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதிகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்துவோம் என்றாா் அவா்.