சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்: முதல்வர் தொடக்கி ...
நெடுஞ்சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
விழுப்புரம் மாவட்டம், மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே அணுகு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண மாவட்டக் காவல் துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை அதிகப் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாகும்.
இந்தச் சாலையில் புதுச்சேரி மாநிலப் பகுதியையொட்டி, மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் உள்ளூா் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளை சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரி மற்றும் ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், லாரிகள் மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலையோரங்களிலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட சா்வீஸ் சாலைகளிலும் விதிகளை மீறி நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் இடப்பற்றாக்குறையால் சாலைப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு வருவதுடன் நாள்தோறும் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனா்.
மேலும் அணுகு சாலையைப் பயன்படுத்தும் மொரட்டாண்டி, பட்டானூா், ஆரோவில், நாவல்குளம் உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள் உள்ளிட்டவா்கள் சாலையில் வாகனங்களிலும், நடந்தும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளாகி வரும் பொதுமக்கள் மற்றும் உள்ளூா், வெளியூா்களைச்சோ்ந்த வாகன ஓட்டிகள் அணுகு சாலை மற்றும் நெடுஞ்சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி கனரகவாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் மற்றும் ஆரோவில் காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.