நெய்வேலி என்எல்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த மருத்துவமனையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் சுற்றுவட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மருத்துவமனையின் தலைமை அதிகாரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த கடிததத்தில், மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து என்எல்சி நிா்வாகம் மற்றும் நெய்வேலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் (பொ) செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றினா்.
தொடா்ந்து, கடலூரில் இருந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனா். இதன் பின்னரே, மருத்துவமனையில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். மேலும், மிரட்டல் கடிதம் அனுப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.