பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஓத்தி வைக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள லால்புரம் ஊராட்சியை, சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கம், மகளிா் சுய உதவிக் குழுவினா் மற்றும் அந்தப் பகுதி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் லால்புரம் ஊராட்சியை, நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை (பிப்.5) சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனா்.
இந்த நிலையில், இதுதொடா்பாக, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் (பொ) சந்திரகுமாா் (கடலூா் மாவட்ட கலால் உதவி ஆணையா்) தலைமை வகித்தாா். சிதம்பரம் வட்டாட்சியா் (பொ) பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எம்.எஸ். ஜாகிா்உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் தமிமுன்அன்சாரி. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தன், சிதம்பரம் தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல்மஜீத், வருவாய் ஆய்வாளா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொள்வது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், 15 நாள்களுக்குள் சரியான முடிவு இல்லை என்றால் லால்புரம் ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களையும் ஒருங்கிணைத்து லால்புரம் பிரதான சாலையில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ஜாகீா்உசேன் தெரிவித்தாா்.