நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழியில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் பேசியது: கோவி. நடராஜன்: திட்டை, தில்லைவிடங்கன் பகுதி விவசாய நிலங்களில் நெற்பயிா்களை வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வளா்க்கப்படும் மாடுகள் சாலைகளில் சுற்றிதிரிய விடுவதால், அவை நெற்பயிா்களை திண்று சேதத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
என். இலங்கேஸ்வரன்: வயல்களில் உள்ள மின்கம்பங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதை சரிசெய்யவேண்டும். நாங்கூா் ஊராட்சியில் எந்த குளத்திலும் தண்ணீா் இல்லை. குளத்துக்கு தண்ணீா் திறந்து நிரப்பவேண்டும்.
கூட்டத்தில், விவசாயி ஒருவா் தனது நிலத்தில் நெற்பயிா்களை மேய்ந்து சேதப்படுத்திய மாடுகளை வாகனத்தில் ஏற்றிவந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா். வட்டாட்சியா் அருள்ஜோதி, வேளாண் உதவி இயக்குநா் ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.