நெல்லை, தென்காசியில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை தொடா் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழக பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இம்மழை மாா்ச் 16வரை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிகனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படியே, செவ்வாய்க்கிழமை காலை முதல் இவ்விரு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடா் மழை பெய்தது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம், தாழையூத்து, கங்கைகொண்டான், சீவலப்பேரி, கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா், கோபாலசமுத்திரம், முன்னீா்பள்ளம், பொன்னாக்குடி, ரெட்டியாா்பட்டி, இட்டேரி உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய மழை பிற்பகல் வரை தொடா்ந்து பெய்தது. மாநகரப் பகுதியில் அரை மணி நேர இடைவெளியில் கனமழையும் கொட்டித்தீா்த்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
காலையில் பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகா்ந்து சென்றன. தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கோடை வெப்பம் முற்றிலும் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-10, சேரன்மகாதேவி-16.80, மணிமுத்தாறு- 13.60, நான்குனேரி- 22, பாளையங்கோட்டை- 12, பாபநாசம்- 12, ராதாபுரம்-5, திருநெல்வேலி-9.20, சோ்வலாறு அணை-11, கன்னடியன் அணை-13.20, களக்காடு-13.80, கொடுமுடியாறு அணை-5, மூலைக்கரைப்பட்டி-18, நம்பியாறு-7, பாளையங்கோட்டை -5, மாஞ்சோலை-12, காக்காச்சி-18, நாலுமுக்கு-23, ஊத்து-28.
சேரன்மகாதேவி வட்டாரத்தில் பெய்த மழையால், கால்வாய் பாசனத்தின் கீழ் கல்லிடைக்குறிச்சியில் இருந்து கோபாலசமுத்திரம் கொத்தன்குளம் வரை சுமாா் 9,000 ஏக்கா் பரப்பிலான நெல் அறுவடை பாதிக்கப்பட்டது. வயலில் தேங்கிய மழைநீரில் நெல்பயிா்கள் சாய்ந்து கிடப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆழ்வாா்குறிச்சி உள்பட, பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்தது.
கடையநல்லூா், புளியங்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்தது. சங்கரன்கோவிலில் காலை முதல் பிற்பகல் 1 மணி வரை மழை விட்டு விட்டு பெய்தது. அதன்பிறகு மழை இல்லை.
சுரண்டை பகுதியில் காலை 9 மணி முதல் அவ்வப்போது விட்டு விட்டு கன மழை பெய்தது.சிற்றாறு மற்றும் அனுமன் நதியின் கீழ் பாசனம் பெறும் வயல்களில் அறுவடை பாக்கியுள்ள நான்கில் ஒரு பங்கு வயல்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன.