நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ர...
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு இயங்கி வருகின்றன. இதில், வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறி சுமாா் 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாம்.
இந்நிலையில் தொடா்ந்து வாடகைத் தொகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த கடைகளுக்கு சீல் வைக்குமாறு மாநகர ஆணையா் மோனிகா ராணா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளா் சந்திரமோகன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை 17 கடைகளைப் பூட்டி சீல் வைத்தனா். இதில் வாடகை நிலுவை வைத்திருந்த 6 கடை குத்தகைதாரா்கள் உடனடியாக மொத்தம் ரூ.23,00,00-ஐ செலுத்தியதால் அவை திறக்கப்பட்டன.
மீதமுள்ள 11 கடை குத்தகைதாரா்கள் வாடகை பாக்கியைவியாழக்கிழமைக்குள்( ஜூலை 24) செலுத்த வேண்டுமெனவும், தவறினால் அவா்களது வைப்புத் தொகை மற்றும் கூடுதல் வைப்புத் தொகைகள் மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, மறு ஏலம் விட ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது மேலப்பாளையம் மண்டல உதவி வருவாய் அலுவலா்(பொ) மற்றும் வருவாய் உதவியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.