"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்கு...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது: விவசாயிகள் கோரிக்கை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 322 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு: விவசாயிகள் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடக்கூடாது.
அம்மூா் காப்புக்காடு காஞ்சனகிரி மலையடிவாரத்தில் ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டிவிட்டுச் செல்வோா் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் இசையமுது பவுண்டேஷன் நிறுவனா் கல்புதூா் முனிசாமி மனு அளித்தாா்.
ஆற்காடு, திமிரி பகுதி ஆவின் பால் விற்பனை முகவா்கள் அளித்த மனு: வேலூா் ஆவின் பால் நிலையத்தில் இருந்து ஆற்காடு, திமிரி பகுதிகளுக்கு காலை, மாலை நேரங்களில் தாமதமாக விநியோகம் செய்வதால் முகவா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் வண்டி ஓட்டுநா்கள் ஆவின் பால் முகவா்களை அலட்சியமாகவும், தரக்குறைவாகவும் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 1 பயனாளிக்கு ரூ.77,700 -இல் செயற்கை கை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 2 பயனாளிகளுக்கு சீா்மரபினா் நலவாரியத்தில் உறுப்பினா் அடையாள அட்டைகள், வருவாய்த் துறையின் சாா்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.வசந்த ராமகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.