மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
`நேரு ஆதரவாளருக்கா... அன்பில் ஆதரவாளருக்கா?’ - முட்டும் தலைகள்; புகையும் புதுக்கோட்டை திமுக
புதுக்கோட்டை நகராட்சி, சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளரான ஆடியோஸ் செந்தில் என்பவர் இருந்து வந்தார். இவரின் மனைவி திலகவதி புதுக்கோட்டை மாநகராட்சி மேயராக பதவிவகிக்கிறார். செந்தில் மூத்த அமைச்சரான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர். கடந்த டிசம்பர் 23-ம் தேதி காலை நடைப்பயிற்சி சென்று வீடு திரும்பிய செந்திலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். வரும் பிப்ரவரி மாதம் அவர் மகன் கணேசனுக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், செந்தில் மரணம் புதுக்கோட்டை உடன் பிறப்புகளை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. புதுக்கோட்டை திமுக அரசியலில் மிக முக்கிய புள்ளியின் இறப்புக்கு மூத்த அமைச்சர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
முட்டும் தலைகள்!
செந்திலின் மரணத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் காலியாக உள்ள மாநகர செயலாளர் பதவிக்குப் பெரிய அடிதடியே நடந்துகொண்டிருக்கிறது.
புதுக்கோட்டையில் நடப்பது என்ன என்பது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம். "அரசியலுக்கு வந்ததிலேயே செந்தில் அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளர். அதனால்தான் அவரின் மனைவி திலகவதிக்கு நகராட்சி சேர்மன் பதவி கிடைத்தது. புதுக்கோட்டை மாநகராட்சி ஆனதும் மேயரும் ஆக்கப்பட்டார். செந்தில் மரணத்துக்குக் கூட நேரு கடைசி வரை உடனிருந்தார்.
புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேருவின் பெரும் நம்பிக்கைக்கு உரிய ஆளாக இருந்தவர் செந்தில். நேரு தரப்பு இப்போது செந்திலின் 25 வயது மகன் கணேஷ் செந்திலை மாநகர செயலாளர் பதவிக்குச் சிபாரிசு செய்திருக்கிறது. அரசியல் குடும்பத்திலிருந்து வந்தாலும் அரசியல் அனுபவமே இல்லாத இளைஞனை எப்படி பெரிய மாநகரத்தில் மிக முக்கிய பொறுப்பான மாநகராட்சி செயலாளர் ஆக்குவது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருந்தபோதிலும், செந்திலுக்குப் பதில் அந்த இடத்தில் தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவர் வேண்டும் என்பதால் அந்த பதவியை அவரது மகனுக்கு வாங்கித்தர நேரு தரப்பு முட்டி மோதுகிறது என்கிறார்கள்.
அதேநேரத்தில், செந்திலுக்கு முன்பாக நகராட்சி செயலாளராக இருந்த நைனா முகமது எப்படியாவது மீண்டும் விட்ட பதவியைப் பிடித்துவிடவேண்டும் என்று புதுக்கோட்டை அமைச்சர்கள் வழியாகத் தனியாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
இந்த களத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவும் இணைந்திருக்கிறார். முத்து ராஜாவைப் பொறுத்தவரை ஏற்கனவே முதல்வர் குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இப்போது மாநகர செயலாளர் பதவிக்கு முயற்சி செய்கிறார். துணை முதல்வர் உதயநிதி, அன்பில் மகேஸின் தீவிர ஆதரவாளரான முத்துராஜா, அமைச்சர் அன்பில் மகேஷ் வழியாகக் காய் நகர்த்தி வருகிறார். நேருவின் ஆதரவாளருக்கு போதிய அனுபவம் இல்லாத நிலையில், முத்துராஜாவுக்கே வாய்ப்புகள் அதிகம் என்று பேச்சு அடிபடுகிறது. இப்போது பதவி நேருவின் ஆதரவாளருக்குக் கிடைக்குமா அல்லது அன்பில் மகேஷ் ஆதரவாளர்களுக்குக் கிடைக்குமா என்பதே புதுக்கோட்டையில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த இந்த பதவியைப் பெற இரண்டு தரப்புமே முட்டி மோதிக்கொண்டிருக்கிறது" என்றார்கள் விரிவாக.
யார் கை ஓங்கியிருக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs