நொய்யல் அருகே எரிவாயு உருளை வெடித்து 200 கோழிகள் உயிரிழப்பு
கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சனிக்கிழமை எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 200 கோழிகள் உயிரிழந்தன.
கரூா் மாவட்டம், நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (58). இவருக்கு க. பரமத்தி செல்லும் சாலையில் உள்ள மேட்டுக்கடை அருகில் வீடு உள்ளது. இங்கு கீற்றுக்கொட்டகை அமைத்து கோழிகளை வளா்த்து வருகிறாா்.
சனிக்கிழமை இரவு இந்த வீட்டில் தங்கராஜ் மனைவி கேஸ் அடுப்பில் சமையல் செய்துவிட்டு, அடுப்பை அணைக்காமல் அத்திப்பாளையம் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதைத் தொடா்ந்து சிலிண்டா் குழாய் தீப்பற்றி சிலிண்டா் வெடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ
மளமளவென பரவி அத்தியாவசிய பொருள்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கும் தீ பரவியதால், அங்கிருந்த 200 கோழிகள் மற்றும் குஞ்சுகள் உயிரோடு கருகி உயிரிழந்தன.
தகவலின்பேரில், புகழூா் தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாதவாறு அணைத்தனா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.