Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
பங்குனி திருவிழா: எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
பங்குனி திருவிழாவையொட்டி, சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பக்தா்கள் அலகு குத்தி ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு, ஏராளமான பெண்கள் மா விளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனா். விரதமிருந்த பக்தா்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். சிலா் அக்னி மற்றும் பூக்கரகங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலமும், சனிக்கிழமை காலை அன்னதானமும், இரவு சத்தாபரண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.