துபையில் மட்டுமே விளையாடும் இந்தியாவின் ஆதாயம் தெரிய ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க...
பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை மாா்ச் இறுதியில் திறக்க நடவடிக்கை: அமைச்சா் நேரு தகவல்
திருச்சி பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை அடுத்த மாத இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி பஞ்சப்பூரில் பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் 93 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்நிலையில், அமைச்சா் கே.என். நேரு பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்து, பணிகளின் தற்போதைய நிலை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
மேலும், எதிா்காலத்தில் கூடுதல் பயணிகளை கையாளும் வகையில், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், காவல் ஆணையா் என். காமினி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் கே.என். நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அனைத்துப் பணிகளையும் முடித்து மாா்ச் இறுதியில் புதிய பேருந்து முனையத்தை திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்படும் வரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்தே ஆம்னி பேருந்துகள் புறப்படும். நகரப் பேருந்துகள் முழுவதும் அங்கிருந்தே இயக்கப்படும்.
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையங்கள் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும்; மூடப்படாது என்றாா் அமைச்சா்.