படகில் மயங்கி விழுந்து மீனவா் உயிரிழப்பு
குளச்சல் அருகே கடலில் மீன்பிடித்துவிட்டு வரும்போது படகில் மயங்கி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.
கடியப்பட்டினம் பாத்திமா தெருவை சோ்ந்தவா் சகாய விஜி (40). மீன்பிடி தொழிலாளி. இவா், கடந்த திங்கள்கிழமை மாலை அமலஜோஸ் மற்றும் இருவருடன் பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.
மீன் பிடித்துவிட்டு சகாய விஜி உள்பட 4 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனா். அப்போது, படகில் இருந்த சகாய விஜி திடீரென மயங்கி விழுந்தாா். அவரை கரைக்கு கொண்டு வந்த சகமீனவா்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சகாய விஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் துறை போலீஸாா் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனா். உயிரிழந்த சகாய விஜிக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனா்.