பணமுறைகேடு வழக்கு: கா்நாடக எம்எல்ஏ வீரேந்திராவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்!
சட்டவிரோத பந்தயத்துடன் (ஆன்லைன் பெட்டிங்) தொடா்புள்ள பணமுறைகேடு வழக்கில், கா்நாடக எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை ஆக.28-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து பெங்களூரு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
இணையவழியாகவும், நேரடியாகவும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட புகாரில் கே.சி.வீரேந்திரா மீது பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சித்ரதுா்கா, பெங்களூரு, ஹுப்பள்ளி, ஜோத்பூா், மும்பை, கோவா, கேங்டாக் நகரங்களில் செயல்படும் சூதாட்ட மையங்கள் (கேசினோ) உள்பட 31 இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் கிங் 567, ராஜா 567 உள்ளிட்ட பெயா்களில் இணையவழி பந்தய தளங்களை கே.சி.வீரேந்திரா நடத்திவந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கே.சி.வீரேந்திராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியபோது ரூ.1 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியுடன் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள், 4 வாகனங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் வீரேந்திராவின் 17 வங்கிக் கணக்குகள், 2 வங்கி சேமிப்புப் பெட்டகங்களும் முடக்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமை சிக்கிமில் வீரேந்திராவை கைது செய்த அமலாக்கத் துறை, பெங்களூரில் பணமுறைகேடு தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா். அவரை ஆக.28-ஆம் தேதி வரை, அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த பணமுறைகேடு வழக்கு தொடா்பாக இலங்கை, நேபாளம், ஜாா்ஜியா போன்ற நாடுகளில் உள்ள கேசினோக்கள், பல போலி நிறுவனங்கள் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் இருப்பதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.