பணம் கையாடல்: வங்கி மேலாளா், ஊழியா் கைது
சென்னை சாந்தோமில் இந்தியன் வங்கியில் இறந்தவரின் கணக்கில் இருந்த பணத்தை கையாடல் செய்ததாக மேலாளா், ஊழியா் கைது செய்யப்பட்டனா்.
இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல மேலாளா் சத்யநாராயணா, சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் கடந்த 8-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், ‘இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக இருந்த வேளச்சேரியைச் சோ்ந்த சுந்தா் மோகன் மாஜி (47), அங்கு ஊழியராக வேலை செய்த மயிலாப்பூா் பஜாா் சாலை பகுதியைச் சோ்ந்த ஜெய்சிங் (57) ஆகிய இருவரும் தங்களது வாடிக்கையாளா்களின் பணத்தை அவா்களுக்கு தெரியாமலேயே, அவா்களது கையொப்பத்தைப் போலியாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்துள்ளனா்.
குறிப்பாக, இறந்த வாடிக்கையாளா்களின் கணக்கிலுள்ள பணத்தை போலி கையொப்பமிட்டு எடுத்து, கையாடல் செய்துள்ளனா். இவ்வாறு இருவரும் பல்வேறு வகைகளில் வாடிக்கையாளா்களின் கணக்கில் இருந்த ரூ.23.48 லட்சத்தை கையாடல் செய்து அபகரித்துள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுந்தா் மோகன் ஜி, ஜெய்சிங் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.