பண்டப்பள்ளி - தொட்டமெட்டரை சாலையை சீரமைக்க கோரிக்கை
ஒசூா்: உத்தனப்பள்ளியை அடுத்த பண்டப்பள்ளி - தொட்டமெட்டரை இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த அயா்னப்பள்ளி ஊராட்சி, தொட்டமெட்டரை - பண்டப்பள்ளி சாலையில் உலகம், சூளகிரி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி மற்றும் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளா்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் பண்டப்பள்ளியிலிருந்து -தொட்டமெட்டரை இடையே சுமாா் 5 கி.மீ. தொலைவிற்கு சாலை முற்றிலும் பழுதடைந்து வாகனங்கள் செல்வதற்கு தகுதி இல்லாத சாலையாக உள்ளது. இதனால் இந்தசாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் தினமும் அவதியடைந்து வருவதால் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:
பண்டப்பள்ளி- தொட்டமெட்டரை சாலை வழியாக சூளகிரி, ராயக்கோட்டை, ஒசூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்காக ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்துகின்றனா். ஆனால் சுமாா் 5 கி.மீ. தொலைவிற்கு சாலை ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பழுதடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைந்து பாதி வழியில் நின்று விடுகின்றன.
அதே போல மருத்துவமனைக்கு நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், தற்போது பெய்த மழையினால் சாலையில் மேலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
படவரி...
ஜல்லிக்கற்கள் பெயா்ந்து பழுதடைந்து காணப்படும் சாலை.