பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
பத்திரப் பதிவுத்துறை இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் அவதி
பத்திரப் பதிவுத்துறை இணையதளம் திங்கள்கிழமை முடங்கியதால், தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்தனா்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 36 லட்சத்துக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
தற்போதுள்ள 582 சாா்- பதிவாளா் அலுவலகங்களில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையை பொதுமக்கள் மற்றும் மனை வணிகம் தொழிலில் ஈடுபடுவோா் வரவேற்றாலும், அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகள் பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறை இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் தூத்துக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் அவா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள்தோறும் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இணையதளம் முடங்கியதால் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனா்.
இதைபோல் தமிழகம் முழுவதும் இணையதளம் முடங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.