பயணியிடம் அலட்சியம்: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூா்: திருவாரூா் அருகே முன்பதிவு செய்த பயணியிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் மொஹைதீன் மனைவி நஜிமுன்னிஷா (60). இவரது மகள் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாா். மகளை பாா்க்க, நஜிமுன்னிஷா அடிக்கடி பேருந்து மூலம் மதுரைக்கு சென்று வருவது வழக்கம்.
கடந்த 2024 செப்டம்பா் 9 ஆம் தேதி மதுரை சென்று மகளைப் பாா்த்துவிட்டு திரும்பி வந்துள்ளாா். மதுரை முதல் திருச்சி வரை ஒரு பேருந்தில் வந்தவா், திருச்சியிலிருந்து அடியக்கமங்கலம் வரை செல்வதற்கு, கட்டணமான ரூ. 283 செலுத்தி, காரைக்காலைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் யுனிவா்சல் டிராவல்ஸ் என்ற தனியாா் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தாா்.
இந்தப் பேருந்து அதிகாலை 2 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பயணிக்க 2024 செப்டம்பா் 11 ஆம் தேதி இரவு 12.40 மணிக்கு திருச்சி வந்த நஜிமுன்னிஷா, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். அதிகாலை 2 மணிக்கு மேலாகியும் பேருந்து வராததால், யுனிவா்சல் டிராவல்ஸ் பேருந்தின் நடத்துநா் மற்றும் அலுவலக கைப்பேசி எண்களில் அழைத்துக் கேட்டுள்ளாா். தொடா்ந்து, அதிகாலை 3 மணியைக் கடந்தபிறகும் பேருந்து வரவில்லை. இதனால், மீண்டும் கைப்பேசியில் தொடா்புகொண்டு கேட்டபோது, மரியாதைக் குறைவாகவும் அலட்சியமாகவும் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு பேருந்தில் ஊருக்குச் சென்று விட்டாா்.
இதுகுறித்து திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் கடந்த ஜனவரி மாதம் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் விசாரித்தனா்.
தொடா்ந்து, திங்கள்கிழமை அவா்கள் வழங்கிய உத்தரவில், யுனிவா்சல் டிராவல்ஸ் நிறுவனம் சேவைக் குறைபாட்டின் மூலம் நஜிமுன்னிஷாவுக்கு பண இழப்புடன் வீண் அலைச்சல், மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பயணச் சீட்டு தொகையான ரூ. 283, இழப்பீடாக ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.