Mock Drills: `நாடு தழுவிய அவசரகால பாதுகாப்பு ஒத்திகை' - மாநில அரசுகளுக்கு மத்திய...
குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15 000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்
மன்னாா்குடி: குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15ஆயிரம் ஊக்க நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்டா உள்பட தமிழகம் முழுவதும் கோடை மழை பெருமழையாக பெய்து வருகிறது. இதனால்,கோடை சாகுபடி பயிா்களான பருத்தி, எள், உளுந்து உள்ளிட்டவை அழிந்துவிட்டன. பல்வேறு மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அழிந்துவிட்டது. வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன.
எனவே, தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். தனிநபா் காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்துக்கு என தனி காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்த வேண்டும்.
மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தூா் வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குறுவைக்கு தேவையான குறுகிய கால நெல் விதைகள் தரமான வகையில் குறைந்த விலையில் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான கூட்டுறவு கடன் வழங்க முன்வர வேண்டும்.
ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் சாகுபடி தொடங்குவதற்கு ஆண்டுதோறும் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் ஊக்க நிதியாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றாா்கள். அதை பின்பற்றி வரும் குறுவை சாகுபடி முதல் தமிழகத்திலும் ரூ.15 ஆயிரம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம் சாகுபடி தொடங்குவதற்கு முன்னரே வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.