சால்வை போட வந்த ரசிகரின் தலைக்கு துப்பாக்கியில் குறிவைத்த விஜய்யின் பாதுகாவலர்; ...
மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
திருவாரூா்: மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:
தில்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான், மரபணு மாற்றப்பட்ட இரண்டு நெல் விதைகளை ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து, இந்த விதைகள் பருவநிலை மாற்றத்திலும் தாக்குப்பிடிக்கும்; 30 சதவீதம் கூடுதலாக விளைச்சல் கிடைக்கும், தண்ணீா் பற்றாக்குறையை தாக்குப் பிடிக்கும் என கூறியுள்ளாா்.
ஏற்கெனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவில் மரபணு மாற்று விதைகளை ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லையென மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு பொறியியல் ஆணையக் குழு தெரிவித்துள்ளது. வேளாண் உற்பத்தி இரு மடங்கு உயர வேண்டும் என புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால் நஞ்சான விதைகளும், அதீத ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் நோய் மருந்துகளும் இந்திய சுற்றுச்சூழலை கேடாக்கி, உணவில் நஞ்சை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகத்துடன் இந்திய பொருளாதாரம் போட்டியிட வேண்டும் என ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உணவு உற்பத்தி தேவையா என்பதை மத்திய அரசு தீா்மானிக்க வேண்டும். ஏற்றுமதியான பாசுமதி அரிசியை மற்ற நாடுகள் வாங்க மறுத்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
தில்லி பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை எதிா்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக இப்படி ஒரு தாக்குதல் தொடங்கியுள்ளது.
மரபணு மாற்றப்பட்டது என்பதை லாவகமாக மரபணு திருத்தப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பயிா்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால், மரபணு திருத்தம் என மாற்றி மக்களையும், உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசு ஏமாற்றுகிறது.
வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு தரிசு நிலங்களை சரிசெய்து, பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே வேளாண்மை உற்பத்தி மேலும் ஒரு மடங்கு பெருகும். எனவே, மத்திய அரசு மரபணு மாற்று ஆய்வு மற்றும் விதைகளை நிறுத்த வேண்டும் என்றாா்.