இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!
பயமறியாதவர்கள் மேஷ ராசிக்காரர்கள்!
கால புருஷ தத்துவத்தின் முதல் ராசி என்பது மேஷம். கோச்சார சூரியன் மேஷத்தில் பயணிக்கும்போது, தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறக்கிறது. மேஷத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் இங்கு தான் அவர் மூலத்திரிகோணம் அடைகிறார். அதே பாவத்தில் ஒளி கிரகமான சூரியன் உச்சம், மற்றும் இருள் கிரகமான சனி நீச்சம். முக்கியமாக மேஷத்திற்கும் அசுபராக சொல்லப்படும் சுக்கிரன் மாரகாதிபதியாகவும், சனி பாதகாதிபதியாகவும் மற்றும் புதன் ரோகாதிபதியாகவும் செயல்படுவார்கள்.
மேஷ லக்னத்திற்கு யோகர்கள் என்று சொல்லப்படும் சூரியன், சந்திரன், மற்றும் குரு. இவர்களுடன் அசுபர்கள் சேர்க்கை பெறாமல் இருந்தால் ஜாதகருக்கு அதிக யோகத்தை செய்வார்கள். இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு குரு மற்றும் ராகுவின் நட்சத்திரமாக இருந்தால் சனி தசை சீக்கிரம் வந்துவிடும் அதோடு சனி பகவான் அசுப பலன்களை அதிகம் தர வல்லவர். அதுவும் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப பலன்களின் சதவீதம் மாறுபடும். சனி பகவான் மறைவு, நீச்சம் அல்லது வக்கிரம் பெற்றால் பலன்கள் மாறுபடும்.
மேஷ ராசியில் உள்ள நட்சத்திரங்களான அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் வரை - வானவெளி கூட்டத்தில் ஆடு உருவம் தெரிவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆடு போன்ற உருவம் மேஷத்தைக் குறிக்கும் சின்னம் ஆகும். இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஆட்டின் குணமும் செயலும் இருக்கும். இவர்கள் மத்திம உயரம், மெலிந்த தேகம், வலுத்த தலை மற்றும் பற்கள், நீண்ட கழுத்து, மெலிந்த முழங்கால், உடலில் கொஞ்சம் உரோமம், சிலருக்கு சிவந்த கண்கள், பலசாலி, சுறுசுறுப்பு, உழைப்பாளி, சிந்தனையில் உறுதி, முன்கோபி, பிறரை எள்ளி நகையாடுவார், மற்றவர்களை வேலை வாங்கும் ஆளுமை, நன்னெறி பேச்சுத்திறமை, அறநூல்களை நன்கு படித்தவர்கள், ஒற்றுமையுடன் கூட்டத்தை வழிநடத்தும் வழிகாட்டி, எதிரில் தென்படும் எத்தகைய விலங்கையும் கொன்றுவிடும் வேட்டையன், வல்லவன், சாமர்த்தியசாலி, உணர்ச்சி மிக்கவர், ஒரு சிலருக்கு அழகு குறைவு, தர்ம மிக்கவர், மூர்க்ககுணம், சொத்து சேர்க்கை, பிடிவாதம், மனஉறுதி, எடுத்த காரியத்தை முடிக்கும் திறன், ஒருசிலருக்குப் பொறாமை குணம் மற்றும் அரசர்களால் கொண்டாடப்படுபவர்.
இந்த பொது பலன்கள் அனைத்தும் புலிப்பாணி மற்றும் ஜாதக அலங்கார நூலில் கூறப்பட்ட சூட்சுமங்கள். இது ஒரு ஆண் ராசி என்பதால், மேஷ ராசி பெண்கள் ஆணுக்கு நிகராக தைரியமிக்கவராக இருப்பார்கள். மேஷம் என்பது சர ராசி, அதனால் இவர்கள் எல்லாவற்றிலும் துடுக்குத்தனம் கூடிய ஓட்டம் இருக்கும். ஒரு சில நேரத்தில் இவர்களால் சரியான முடிவுகளையும் எடுக்க முடியாத தடுமாற்றம் இருக்கும். இவர் செய்யும் செயல் நில்-கவனி-செல் என்கிற சனியின் தத்துவப்படி செயல்பட வேண்டும். ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் சேர்க்கை பொறுத்து மாறுபடும்.
“கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூறப்பா கோணத்தி லிருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே (புலிப்பாணி)
இப்பாடலில் சுருக்கம்: மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள் குறையும். சனி திரிகோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை. அதற்கு மாறாகக் கேந்திரத்தில் இருந்தால் கெடுபலனே விளையும். அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமிகடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். அனைத்தும் அவரவர் திசாபுத்திகளில் சொல்ல வேண்டும்.
மேஷத்திற்கு 1,8ம் உரியவர் செவ்வாய். இந்த ராசி உடலின் தலை பகுதியைக் குறிக்கும் இடம். பஞ்சபூத தத்துவத்தில் மேஷ பாவம், இங்குள்ள ஆட்சி செவ்வாய், உச்ச சூரியன் நெருப்புத் தத்துவம் கொண்டது. மேஷம் சரம் வீடு என்பதால் மின்சாரம் போன்ற வேகம் இவர்களின் நடை மற்றும் செயலில் இருக்கும். இந்த லக்கினகாரர்களுக்கு சுருக்கென்று கோபம் தலையில் ஏறும். அந்த நேரத்தில் அவர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை. அதன் பின்பு அவர்கள் அந்த செயலுக்காக வருந்துவார்கள். இந்த கோபமும் மன அழுத்தமும் நோய் மற்றும் எதிரிகளை உருவாக்கவும் முக்கிய காரணிகள். இதனால் தலையில் பிரச்னை, இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, முடிக்கொட்டுவதால் வழுக்கை ஏற்படும். வீடு மனை பாக்கியம் இவர்களுக்கு உண்டு.
செவ்வாய் வலு இழந்த நிலையில் இருந்தால் சிலருக்கு நிலம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் நஷ்டமும் ஏற்படும். மேஷ லக்கினத்திற்கு இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவர் சுக்கிரன். அந்த இரண்டாம் வீடான ரிஷபத்தில் நான்குக்குரிய சந்திரன் உச்சம். இவர்களுக்கு நட்பாகவும், பொருளாதார உயர்வுக்கும் ஒரு முக்கிய காரணமாக ஒரு பெண்ணாக இருப்பாள். இவர்களுக்கு மிகவும் நட்பாக இருப்பது பெண்கள்தான் எடுத்துக்கட்டாக தாய், சகோதரி, மனைவி, மற்றும் தோழியாகவும் இருக்கலாம். சிறிதளவு உணவு இருந்தாலும் அதை பல்வேறு பதார்த்தங்களுடன் சூடாக உண்ணுவதில் சிறந்தவர்கள். இவர்கள் 60% காதல் திருமணத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். முக்கியமாகப் பக்தர்களுக்கு இலவச விடுதிகள் மற்றும் அன்னக்கூடங்கள் கட்டுவதில் முக்கிய பங்காற்றுவார்கள்.
மேஷத்திற்கு 3, 6 புதன் இவர்கள் புத்தகம் படித்து மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்குவதில் ஆர்வம் அதிகம். பணி என்று எடுத்துக்கொண்டால் எழுத்துதுறை, அரசு வேலை, காவல் அல்லது ஆளுமை துறையில் இருப்பார்கள். இவர்களுக்கு சூரியன், புதன், சனி, மற்றும் தொழில் பாவம் நன்றாக இருந்தால் அரசு வேலை கிட்டும். புதன் உச்சம் பெற்று 6,8 தொடர்பு பெரும்போது தோலில் பிரச்னை, நரம்பு பாதிப்பு, காது, மூக்கு, தொண்டை ஒரு சில குறைபாடுகள் ஏற்படும்.
குரு என்பவர் மேஷத்திற்கு 9,12-கும் உரியவர். பணத்தைப் பத்திரமாக சேமிப்பது, ரெட்டிப்பு ஆக்குவதில் வல்லவர்கள். இவர்கள் தெய்வ ஈடுபாட்டுடன், சரியான குருவைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். கோவில் திருப்பணிகள் செய்வதில் ஆர்வம் அதிகம் உண்டு. கோச்சார ராகு - ராசி, லக்கினத்தில் அல்லது 12ல் பயணம் செய்யும் காலம் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும். மேஷத்திற்கு முக்கிய எதிரி சனி. இவர் 10,11க்கும் உரியவர். இவர்களின் தொழில் என்பது முக்கியமாக செவ்வாய் 10ல் உச்சம் மற்றும் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் தொடர் உழைப்புடன் தொழிலில் மேன்மை பெறுவார். இவர்களுக்கு கர்மாவின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும் முடிந்தவரை மற்றவர்களின் பழிக்கு ஆளாகாமல் இருப்பது நன்று.
இவர்களுக்கு விரய சனி, ஜென்ம சனி, பாத சனி வரும் காலங்களில் கோச்சார சனி பகவானால் சிறு சிறு பாதிப்புகள் இருக்கும். இவற்றில் தசா புத்தியும் சேர்ந்தால் அதிக பாதிப்பு ஏற்படும்.
மேஷ ராசிக்கான பரிகாரம்
சங்கட சதுர்த்தி மற்றும் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பது நல்லது. இந்த ராசிக்காரர்கள் முருகனுக்கு பால், தயிர், தேன், இளநீர் அபிஷேகம் செய்யலாம்.
அனுமனுக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது நன்று. ஒருமுறை பழனியில் உள்ள போகர் சித்தர் மற்றும் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதிக்கு அருகில் அமர்ந்து தியானம் செய்வது நன்று.
Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com