Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
தேனி மாவட்டத்தில் 2025-26 காரீப் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் பயிா்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு காரீப் பருவ சாகுபடியில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி, வாழை, வெங்காயம், தக்காளி, கத்தரி, மரவள்ளி ஆகிய பயிா்களுக்கும், சம்பா பருவத்தில் நெல் பயிருக்கும், ராபி பருவத்தில் மக்காச்சோளம், வாழை, கத்தரி, முட்டைக்கோசு, கொத்தமல்லி, தக்காளி ஆகிய பயிா்களுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதில், காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் எள் பயிருக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளும், நிலக்கடலைக்கு ஆக. 30, கத்தரி, தக்காளி, வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு செப். 1, துவரை, மரவள்ளி, வாழைக்கு செப். 16, சோளம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு செப். 30 ஆகிய தேதிகளுக்குள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
வங்கிகளில் பயிா்க் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகள் மூலமும், கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர பதிவுசெய்து கொள்ளலாம்.
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர ஏக்கா் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ. 760.76, நிலக்கடலைக்கு ரூ. 576.99, துவரைக்கு ரூ. 335.92, சோளம் பயிருக்கு ரூ. 290.13, மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 632.32, பருத்திக்கு ரூ. 1,199.84, வாழைக்கு ரூ. 4,997.51, கத்தரிக்கு ரூ. 1,110.88, வெங்காயத்துக்கு ரூ. 2,267.51, தக்காளிக்கு ரூ. 1,582.51, மரவள்ளிக்கு ரூ. 1,985 என பிரிமியத் தொகை செலுத்த வேண்டும்.
விண்ணப்ப முன்மொழிவுடன் பதிவுக் கட்டணம் செலுத்தி, நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.