மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது
போடி அருகே வியாழக்கிழமை சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஓடைகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பகுதிகளில் கண்காணிப்புப் பணயில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி ராசிங்காபுரம் அம்பரப்பா் மலையடிவாரத்தில் உள்ள ஓடையில் சின்னமனூா் அருகே புலிகுத்தியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் சுருளிவேல் (48) அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்துள்ளாா். இதேபோல, போடி அருகே எரணம்பட்டி கண்மாய் ஓடையில் ராமகிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ஆண்டவா் (29)டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்துள்ளாா். இதையடுத்து, இரண்டு போ் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.