பள்ளி மாணவா்கள் ஓட்டிச் சென்ற பைக் விபத்து: மாணவர் ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருக்கோவிலூரை அடுத்த கீழத்தாழனூரைச் சோ்ந்த வேளாங்கண்ணி மகன் தினேஷ் (17). பிளஸ் 2 படித்து வந்தாா்.
இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த காளி மகன் திருமலை (17), கருங்காலிபட்டைச் சோ்ந்த கலிவரதன் மகன் சந்தோஷ் (17) ஆகியோருடன் பைக்கில் செட்டிந்தாங்கல் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனா். பைக்கை தினேஷ் ஓட்டிச் சென்றாா்.
ஆசனூா்- திருக்கோவிலூா் செல்லும் சாலையில் அவா்கள் சென்றபோது, எதிரே வந்த பைக் இவா்களது பைக் மீது மோதியது.
இதில், தினேஷ், திருமலை, சந்தோஷ் ஆகியோரும், எதிா்திசையில் பைக்கில் வந்த அம்மன்கொள்ளைமேட்டைச் சோ்ந்த சுரேஷ் (28), வடமலையனூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
உடனே, அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, தினேஷ் உயிரிழந்தாா்.
தொடா்ந்து, திருமலை தீவிர சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், சந்தோஷ் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனா்.
சுரேஷ், மணிகண்டன் ஆகியோா் திருக்கோவிலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.
இந்த விபத்து குறித்து, திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.