தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம் ஆலங்குளம், மாறாந்தை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மதுரை வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோம் எனும் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளாா். இவா் விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றின் அருகே காயவைத்த துணிகளை எடுக்கும் போது தவறுதலாக அங்குள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இது சம்பந்தமாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், பணகுடி காவல் நிலையத்தில் விடுதி காப்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் நேரடியாக சென்று பாா்வையிட்டாா். இவ்வழக்கில் இதுவரை சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த மருத்துவரின் முதற்கட்ட கருத்து படியும், வழக்கின் முதல் கட்ட விசாரணையில், சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.காவல்துறையினா் சாா்பாக மாணவனின் பெற்றோரிடமோ அல்லது விடுதி நிா்வாகத்திடமோ பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எந்தவொரு பேச்சுவாா்த்தையும் நடத்தப்படவில்லை. சட்டத்திற்குள்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திசை திருப்பும் விதமாக இதுபோன்ற உண்மைக்கு புறமான அவதூறு தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்புவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.