தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை
பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா், தொழிலாளி. இவரது மனைவி கோமதி. இவா்களுக்கும் அருகே வசிந்து வந்த சரவணன் (51), அவரது மனைவி பவானிக்கும் தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஆத்திரமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்குமாரை தலையில் வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில்வழக்குரைஞா் சூரசங்கரவேல் ஆஜரானாா்.