பழனி கோயில் அன்னதானத் திட்டத்தில் 13 ஆண்டுகளில் 2.16 கோடி போ் பயன்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், நாள் முழுக்க அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை 2.16 கோடி போ் உணவருந்தி பயனடைந்ததாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
இது குறித்து பழனி கோயில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பழனி கோயிலில் பக்தா்களின் நலனுக்காகக் கடந்த 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முழுக்க அன்னதானத் திட்டத்தில் இதுவரை 2.16 கோடி போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டத்தில் இதுவரை 45 லட்சம் பேரும், 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச பஞ்சாமிா்தப் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் 1.8 கோடி பேரும் பயனடைந்துள்ளனா்.
கடந்த 2022-இல் கரோனா காலத்தில் கிரி வல வீதியில் பக்தா்களுக்காகத் தொடங்கப்பட்டு, தற்போது வரை தொடரும் இலவசப் பொட்டல சாதம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேரும், குளிா் காலங்களில் சுக்கு காபி, வெயில் காலங்களில் நீா்மோா், குழந்தைகளுக்குக் காய்ச்சிய பால் வழங்குதல் போன்ற திட்டங்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனா்.
இவை தவிர, அன்பு இல்லம், நாகஸ்வரக் கல்லூரி, வேத பாடசாலை மாணவா் திட்டங்கள் மூலம் 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 193 மாணவா்கள் பயனடைந்துள்ளனா். மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் திட்டத்தில் 2022 முதல் தற்போது வரை 45 போ் பயின்று பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.