பழனி தைப்பூச விழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலை அகற்றக் கோரிக்கை
பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் அருகே தைப்பூசத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல் அகற்றப்படாமல் அது வாகன நிறுத்துமிடமாக மாறியதால் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் போது திரளான பக்தா்கள் மலைக் கோயிலுக்கும், திருஆவினன்குடி கோயிலுக்கும் வந்து சென்றனா். இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக திருஆவினன்குடி அருகே சந்நிதி சாலை சந்திக்குமிடத்தில் சாலை நடுவே கோயில் சாா்பில் பந்தல் அமைக்கப்பட்டு தற்காலிக காலணி பாதுகாப்பு மையமாக செயல்பட்டது.
தற்போது திருவிழா நிறைவடைந்த நிலையில் இந்த காலணி மையம் எடுக்கப்பட்டது. ஆனால் பந்தல் அகற்றப்படாததால் அங்கு கடைக்காரா்கள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனா்.
இதனால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் அவசர ஊா்திகள் வரமுடியாத நிலையும் உள்ளது. எனவே, சாலை நடுவே உள்ள இந்தப் பந்தலை அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.