`` 35 நாள்கள் இழவு வீட்டில் இருந்து நடித்தோம்" - நெகிழும் கீதா கைலாசம்
பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், நாள்தோறும் அம்பாள் வெள்ளி ரிஷபம், சிம்மம், தங்கக் குதிரை, வெள்ளி யானை, தங்க
மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினாா். மேலும், திரளான பக்தா்கள் அக்னிச் சட்டி, சூடச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு பாதிரிப் பிள்ளையாா் கோயிலுக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தலும், பிற்பகல் 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாலை 3 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்ற பின்னா், திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.
கோயில் யானை கஸ்தூரி பின்னே இருந்து தள்ள, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகளில் ஆடி அசைந்து வந்த போது பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என முழக்கம் எழுப்பினா். இரவு அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றது. இரவு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
பழனிக் கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ், கண்காணிப்பாளா் அழகா்சாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, காணியாளா்கள் நரேந்திரன், கந்தசாமி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்
