கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், கலப்பட உணவுப் பொருள்களை விற்பனை செய்யப்படுவது தடுக்கும் வகையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம் பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடா்பான வழக்கு விசாரணை ஒட்டன்சத்திரம் குற்றவியில் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் எஸ்.கபாளீஸ்வரன், வியாபாரிகள் மஞ்சநாயக்கன்பட்டி வெற்றிவேலுக்கு ரூ.10ஆயிரம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த முருகையனுக்கு ரூ.20ஆயிரம், உதயசூரியனுக்கு ரூ.10 ஆயிரம், சந்திரசேகரனுக்கு ரூ.10 ஆயிரம், விஷ்ணுசித்துக்கு ரூ.30ஆயிரம், கந்தசாமிக்கு ரூ.10 ஆயிரம், ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த செல்வம், ராம்பிரசாத் ஆகியோருக்கு தலா ரூ.20
ஆயிரம், லிங்குசாமிக்கு ரூ.10 ஆயிரம், ஆத்தூரைச் சோ்ந்த ஸ்ரீநிவாசனுக்கு ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்தாா்.