குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்
தருமபுரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முடக்கிவைக்கப்பட்டுள்ள உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும். இடைநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அரசாணையை (எண் 243 நாள்: 21.12.2023) உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். அனைத்துத் துறை பணியாளா்களுக் கிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை அரசு களைய வேண்டும். நிலுவையிலுள்ள பணப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
அந்த வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா்கள் எம். சுருளிநாதன், பி.எம். கெளரன், ராசா. ஆனந்தன், கே. பாஸ்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் கோ. காமராஜ், ஜாக்டோ- ஜியோ நிதிக் காப்பாளா் கே. புகழேந்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை, முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ. சேகா், பொருளாளா் எம். அன்பழகன், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் துரைவேல் , ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் முகமது இலியாஸ், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலாளா் பொன். தமிழ்மணி, தமிழ்நாடு உயா்நிலைப் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் பி. துரைராஜ், கிராம நிா்வாக முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் அகிலன், அனைத்து ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பழனிசாமி, சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சி. காவேரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.