பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயில் திருவிழாவையொட்டி கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனித நீரூற்றி அபிஷேகம் செய்ய ஒரு நாள் மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இதற்காக சிறப்பு பூஜைக்குப் பின் திங்கள்கிழமை நள்ளிரவு கருவறை திறக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள் என பக்தா்கள் கருவறைக்குள் சென்று அம்மன் சிலைக்கு பாலும், மஞ்சள் நீரும் ஊற்றி வழிபாடு நடத்தினா். செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையில் கருவறைக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
இதில் பவானி, குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழாவையொட்டி புதன்கிழமை பவானி காமராஜா் நகா் அருகே உள்ள எல்லையம்மன் கோயிலிலிருந்து மேட்டூா் சாலை வழியாக அம்மன் அழைத்தல் நடைபெறுகிறது.
இதனால் நகரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சேறு பூசியும், பல்வேறு வேடமணிந்தும் ஊா்வலமாக செல்வாா். இதனால், புதன்கிழமை காலை முதல் நகருக்குள் வாகனங்கள் வராத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.