பவானிசாகா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கெய்சா் காா்டன் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சிறுதானியங்களை பதப்படுத்தும் இயந்திரங்களை கொள்முதல் செய்து தொழில் நடத்தி வரும் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது இத்தொழிலுக்காக ரூ.17.75 மானியம் வழங்கி ஊக்குவித்த அரசுக்கு அந்நிறுவனத்தினா் நன்றி தெரிவித்தனா்.
கொத்தமங்கலம் ஊராட்சியில் நபாா்டு வங்கியின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.60 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.40 கோடி செலவில் இக்கரைத்தத்தப்பள்ளி பவானி நகரில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பவானிசாகா் பேரூராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ.6.92 கோடி செலவில் கட்டப்படும் 120 வீடுகளுக்கான கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பவானிசாகா் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குடிநீா் விநியோகத்தை ஆய்வு மேற்கொண்டாா்.